கூட்டணி குறித்து ஜனவரி 2ல் முடிவு-ராமதாஸ்

posted in: தமிழ்நாடு | 0

வரும் காலத்தில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது, திருமங்கலம் இடைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து ஜனவரி 2ம் தேதி நடக்கும் பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் பேசிய அவர்,

1967ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை நடந்துள்ள இடைத் தேர்தல்களில் இருமுறை மட்டுமே எதிர்க் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. எந்தக் கட்சியின் உறுப்பினரை இழந்ததற்காக இடைத் தேர்தல் நடக்கிறதோ அதே கட்சியைச் சேர்ந்தவரையே மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் பிற கட்சிகளும் விட்டுக் கொடுக்க வேண்டும்.

ஓரிடத்தில் கிடைக்கும் வெற்றி, தோல்வி ஆட்சியை நிர்ணயிப்பதில்லை என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக திமுக, அதிமுக இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காத நிலையை அனைத்துக் கட்சியினரும் இணைந்து உருவாக்க வேண்டும். அது தான் ஜனநாயகத்துக்கு நல்லது.

காங்கிரஸ்-திருமாவளவன் இடையிலான மோதல் துரதிஷ்டவசமானது. இரு கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இலங்கையில் தினம் செத்து மடியும் நம் மக்களுக்காக நாம் ஒற்றுமையாக இருந்து போராட வேண்டும்.

திருமாவளவனிடம் நான் இது குறித்துப் பேசினேன். அவரும் கூட காங்கிரஸ் கட்சியினருடன் நேரடியாகப் பேசத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களையும் தொடர்பு கொண்டு வருகிறேன். சுமூக நிலையை உருவாக்க முயல்வேன் என்றார் ராமதாஸ்.

Leave a Reply

Your email address will not be published.