பாக். செல்ல இலங்கை அணி முடிவு-இந்தியா அதிருப்தி

பாகிஸ்தானுக்கு செல்ல இலங்கை அணி முடிவு செய்திருப்பது, இந்தியாவை அதிருப்தியிலும், கோபத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.

மும்பைத் தாக்குதலின் எதிரொலியாக, பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை மத்திய அரசு ரத்து செய்தது.


இதையடுத்து பாகிஸ்தானுக்கு வந்து ஆடுமாறு, இலங்கை கிரிக்கெட் அணிக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது.

இதை, ரணதுங்கா தலைமையிலான கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டது. இந்த நிலையில் திடீரென ரணதுங்கா உள்ளிட்ட வாரிய நிர்வாகிகள் நீக்கப்பட்டனர்.

இதனால் இலங்கை கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் பயணம் நடைபெறாது என நம்பப்பட்டது. இந்தியாவுக்கு விரோதமாக எதுவும் நடைபெறாது எனவும் இலங்கை விளையாட்டுத்துறை அதிகாரிகளும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் போகலாம் என அதிபர் ராஜபக்சே திடீர் அனுமதி கொடுத்தார். இதையடுத்து திட்டமிட்டபடி இலங்கை கிரிக்கெட் அணி அடுத்தமாதம் பாகிஸ்தான் போகவுள்ளது.

இது இந்திய அரசுக்கும், இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாம்.

அரசியல் காரணங்களுக்காக இந்தியா, பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை ரத்து செய்த நிலையில் இலங்கை அணி அந்நாட்டுக்கு சென்று விளையாட முன்வந்ததை இந்தியா விரும்பவில்லை என்று கொழும்பிலிருந்து வெளியாகும் ஒரு நாளிதழ் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அதிருப்தி, இலங்கைக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அது கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published.