விடுதலைப்புலி ஆதரவாளர்களை கைது செய்த தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம மத்திய மந்திரி இளங்கோவன் பேட்டி

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியவர்களை கைது செய்த, தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம் என்று மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

கோவையில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளித்துறை மேலாண்மை கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மத்திய ஜவுளித்துறை மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியதுடன், சீமான் போன்றவர்களை கைது செய்த தமிழக அரசின் நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். தீவிரவாத நடவடிக்கைகளையும் அரசு கட்டுப்படுத்தி வருகிறது. சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற சம்பவத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று திருமாவளவன் கூறி உள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தபின் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருதுகிறோம்.

தற்போது திருமாவளவனின் பேச்சில் சுருதி குறைந்து வருகிறது. இப்போது நியாயத்தை பேசி வருகிறார்.

விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுபவர்களுடன் உறவு கிடையாது என்று எங்கள் கட்சியை சேர்ந்த வயலார் ரவியும் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசி வந்தால், அவரை கூட்டணியில் இருந்து விலக்க நாங்கள் வற்புறுத்துவோம். இலங்கை தமிழர்களின் நலனை காக்க மத்திய அரசு தேவையான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.