தமிழீழ விடுதலைக்கு உலக நாடுக‌ள் அங்கீகாரம் வழங்க வேண்டும்: – தமிழீழ அங்கீகார மாநட்டில் விடுதலை சிறுத்தைகள் ‌‌தீர்மானம் (படங்கள் இணைப்பு)

தமிழீழ தேசிய இனத்தின் இறையாண்மையை தமிழர் மீண்டும் பெற தமிழீழ மக்களுக்கு அதன்வழி நிலையான, உறுதியான அமைதி வாழ்வு கிடைக்க, இந்திய அரசு‌ம், உலக நாடுகளின் அரசுகளும் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை, அமைந்தகரையில் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் வெள்ளியன்று நடந்த இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை தொடக்க விழா மற்றும் தமிழீழ அங்கீகார மாநாட்டில் பின்வரும் ஒன்றைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
அதன் விவரம் பின்வருமாறு,

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈழத் தந்தை செல்வா தலைமையில் தொடங்கி அடுக்கடுக்கான அறவழிப் போராட்டங்கள் மற்றும் அடுத்து வெடித்தெழுந்த ஆயுதவழிப் போராட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எமது ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் அளித்துள்ள அளப்பரிய ஈகங்களையடுத்து இம்மண்ணுலகில் தமிழுருக்கென மலர்ந்து வரும் தமிழீழத் தேசத்தை ஒட்டுமொத்தத் தமிழ்த் தேசிய இனத்திற்கான தனியரு தேசமென விடுதலைச் சிறுத்தைகளின் இம்மாநாடு தலைநிமிர்ந்த செருக்கோடும் பொங்கியெழும் பூரிப்போடும் அங்கீகரிப்பதில் பெருமை அடைகிறது. 

‘மக்கள்தீர்ப்பே மகத்தானது’ என்பதைப் போல, முதலில் தமிழீழத்தை அங்ககீகரிப்போம்! தமிழ் ஈழம் தமிழர் தேசம் எனத் தமிழராய் வாழும் ஒவ்வொருவரும் உரத்து முழுங்கிட உறுதியேற்போம்!

இலங்கைத் தீவு இரு தேசிய இனங்கள் கொண்ட நாடு_இரு தேசங்கள் கொண்ட நாடு என்று 1983 ஜூன் திங்களில் பிரித்தானியக் குடியேற்றச் செயலாளர் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழர்களின் தாயகமான தமிழீழம் பல்லாயிரம் ஆண்டுகள் தனி இறையாண்மை கொண்டு விளங்கியது. தமிழ்நாடும் இலங்கைத் தீவும் பனியூழிக் காலமான கி.மு. 8000 ஆண்டுக் காலத்தில் கடலால் பிரிக்கப்படுவதற்கு முன் இதே நிலப்பரப்பில் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்மொழியும் தமிழினமும் தோன்றிற்று என்பார் மொழி ஞாயிறு பாவாணர். சிங்கள இனமும் கி.பி.8_ஆம் நூற்றாண்டில் அதாவது 1,200 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிற்று. 

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழத்தில் தோன்றி தமிழினத்தை பதிரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறீலாங்காவில் தோன்றிய சிங்கள இனம் வேரோடு அழித்தொழிகக்க முயல்வது கொடுமையில் கொடுமையாகும்.

தமிழ் மன்னன் சங்கிலியனின் அரசை வீழ்த்தி 1619_இல் போர்த்துக்கீசியர் தமிழீழத்தைக் கைப்பற்றிய போது தமிழீழத்தின் இறையாண்மை தமிழர் கையில் இருந்து போர்த்துக்கீசியர் கைக்கு மாறியது. டச்சுக்காரர் 1658_இல் போர்த்துக்கீசியரைத் தோற்கடித்தபோது தமிழீழத்தின் இறையாண்மை போர்த்துக்கீசியர் கையிலிருந்து டச்சுக்காரர் கைக்கு மாறியது.

பிரிட்டிசார் 1795_இல் டச்சுக்காரரை வீழ்த்தியபோது, தமிழீழத்தின் இறையாண்மை டச்சுக்காரரின் கையிலிருந்து பிரிட்டிசார் கைக்கு மாறியது. 1948_ஆம் ஆண்டு பிரிட்டிசார் தமிழீழத்தைவிட்டு வெளியேறியபோது தமிழீழத்தின் இறையாண்மை தமிழீழ மக்கள் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த தீர்வையும் எதிர்பார்க்க முடியாது என்று அனைத்துலக மக்கள் உரிமை விடுதலை பேரமைப்பின் பொதுச் செயலாளர் குறிப்பிடுகிறார். 

போர்_பேச்சுவார்த்தை_உடன்படிக்கை, போர்_பேச்சுவார்த்தை_உடன்படிக்கை என்று சாவின் விளிம்பில் ஆறுபது ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களை மேலும் ஏமாற்றாமல் தொடர் துயரிலும் சாவிலும் தள்ளாமல் தமிழீழ விடுதலையை இந்திய அரசும் உலக நாடுகளின் அரசுகளும் அங்கீகரிக்க வேண்டும்.
1957_இல் சிங்களவரோடு தமிழர்கள் செய்த பண்டா_செல்வா உடன்படிக்கை கிழித்தெறியப்பட்டது.

1965_இல் சிங்களவரோடு தமிழர்கள் செய்த டட்லி_செல்வா உடன்படிக்கை என்ன ஆனது?

1987_இல் ஈழத்தமிழர்கள் சார்பாக சிங்களவரோடு செய்யப்பட்ட ராஜீவ்_செயவர்த்தனா உடன்படிக்கை கிழித்தெரியப்பட்டது.

2002_இல் ஈழத் தமிழர் சார்பாக சிங்களவரோடு நார்வே நடுநிலை நின்று செய்யப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை கிழித்தெறியப்பட்டது.

காலங்காலமாகக் கிழித்தெறியப்பட்டவை உடன்படிக்கைகள் அல்ல தமிழீழத் தேசிய இனத்தின் உயிர் என்பதை இம்மாநாடு கண்ணீர் தோய்ந்த விழிகளோடு பதிவு செய்கிறது. 

இனியும் இனியும் பேச்சுவார்த்தைகளோ உடன்படிக்கைகளோ தமிழீழ மக்களை ஏமாற்றவும், கொன்றொழிக்கவும் இடம் தராமல் தமிழீழ விடுதலையை அங்கீகரியுங்கள், அங்கீகரியுங்கள் என்று இந்திய அரசு மற்றும் அனைத்துலக நாடுகளை விடுதலைச்சிறுத்தைகளின் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

அங்கீகரித்தால் தமிழ்நாட்டு மக்கள் நன்றி உணர்வோடு தலைவணங்குவார்கள்.

இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.