சுனாமி ஏற்படுத்திய துயர வடுக்கள்

டிசம்பர் மாதம் நடுப் பகுதியைக் கடந்து விட்டாலே உலகின் பெரும்பாலான மக்கள் குதூகலத்துடனேயே காணப்படுவார்கள். நமது நாட்டைப் பொறுத்தவரை கிறிஸ்தவர்கள் ஒப்பீட்டளவில் மிகச் சிறிய தொகையினராக இருந்த போதும் இங்கும் கிறிஸ்மஸ் பண்டிகை, புதுவருடப் பிறப்பு ஆகியவை நடைபெறும் காலங்களில் இன, மத பேதமின்றி மூவின மக்களும் மகிழ்ச்சியுடன்தான் இருப்பார்கள். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்த போதும் தலைநகர் கொழும்பு உட்பட முக்கிய நகரங்கள் யாவும் விசேடமாக அலங்காரம் செய்யப்படுவதும் பல இடங்களிலும் உடைகள் உட்பட பொருட்கள் மலிவு விலையில் விற்கப்படுவதும் பாடசாலைச் சிறார்கள் உட்பட பலர் விடுமுறையில் வீடுகளில் தங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்க சில காரணங்களாகும். நாட்டில் 25 வருடங்களாக உள்நாட்டு யுத்தம் நடைபெற்றபோதும் கூட பல அழிவுகளின் மத்தியிலும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்கவில்லை. 

இவ்வாறுதான் 2004 டிசம்பர் 25 ஆம் திகதியும் உலகெங்குமுள்ள கிறிஸ்தவ மக்களுடன் இலங்கை மக்களும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தனர். ஆனால், அடுத்த நாள் உண்மையான கடலில் அவர்களில் பெரும்பாலானோர் பிணமாக மிதக்கப் போவதை பலர் அறிந்திருக்கவே மாட்டார்கள். 2004 டிசம்பர் 26 ஆம் திகதி முழு உலகையும் துன்பத்தில் ஆழ்த்திய சுனாமிப் பேரலை இலங்கை உட்பட இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது. இலங்கையின் கரையோரப் பகுதிகளில் அனைத்து மாவட்டங்களும் இச்சுனாமியினால் பெரும் அழிவுகளைச் சந்தித்தன. உயிர் அழிவுகளுடன் பல வருடங்களாகத் தேடிய தேட்டங்களும் சில நொடிகளில் இயற்கையின் சீற்றத்தால் அழிந்து போயின. சுனாமியும் அது ஏற்படுவதற்கான காரணங்களும் ஜப்பானிய நாட்டில் மீனவர்களின் மீன்பிடித் துறைமுகங்களைத் தாக்கி பெருமளவு சேதங்களை விளைவித்த துறைமுக அலைகளையே அவர்கள் சுனாமி என்று அழைத்தனர். இந்த ஜப்பானிய சொல்லை உலகளாவிய ரீதியில் இன்று அனைத்து நாடுகளும் பயன்படுத்துகின்றன. அலையாக வந்து அழிவுகளை ஏற்படுத்தும் கடல் உண்மையில் வெளியிலிருந்து தனக்குப் பாதிப்பு ஏற்படும் வரை அமைதியாகவே இருக்கும். கடல் நம்மைத் தாக்கும் போது அது வேறொரு வகையில் தாக்கத்திற்குள்ளாவதை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சுனாமி ஏற்படுவதற்குரிய முக்கிய காரணங்கள் வருமாறு: கடலினுள் ஏற்படும் பூகம்பம், நில அதிர்வுகள் அல்லது எரிமலை வெடித்தல்.

விண்ணிலிருந்து கற்கள் போன்ற கனமான பொருட்கள் கடலில் வீழ்தல். கடலில் காணப்படும் பனிப் பாறைகள் உருகுவதால் நீர்மட்டத்தின் அளவு வேறுபடல். தகுந்த கரையோரப் பாதுகாப்பு அரண்கள் இல்லாமையால் ஏற்படும் பாரிய கடலரிப்புகள். மேற்குறிப்பிட்ட இயற்கைக் காரணங்களைத் தவிர தற்காலத்தில் பன்னாட்டு விஞ்ஞானிகளாலும் கடலில் நடத்தப்படும் அணுவாயுதப் பரிசோதனைகளின் பக்கவிளைவுகள். 2004 டிசம்பர் 26 இல் ஏற்பட்ட சுனாமி இலங்கையில் ஏற்படுத்திய அழிவுகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். உயிர்ச்சேதங்கள், பொருட் சேதங்கள், உட்கட்டமைப்புச் சேதங்கள், வாழ்வாதாரத் தொழிற்சேதங்கள்.

நமது நாட்டைப் பொறுத்தவரை உத்தியோகபூர்வ தகவல்களின்படி 30,977 பேர் சுனாமியின் கோரப்பிடியில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் உட்பட 5,644 பேர் காணாமற் போயுள்ளனர். 15,197 நபர்கள் உடல் ஊனமுற்றோர் அல்லது குறிப்பிடத்தக்க பாதிப்புக்கோ உள்ளாகியுள்ளனர். சுனாமியினால் பாதிக்கப்பட்ட மற்றைய நாடுகளுடன் ஒப்பீட்டளவில் இது குறைவாக இருந்த போதும் சின்னஞ்சிறு நாடான எமக்கு இது பேரழிவாகவே உள்ளது.

சுனாமியின் தாக்கத்தினால் கரையோர மக்களின் உயிர்களே பெருமளவில் காவு கொள்ளப்பட்டன. இலங்கையை சுனாமி தாக்கும் போது அண்ணளவாக காலை 7.30 மணி இருக்கும். அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையாதலால் தேவாலயங்களுக்கு சென்றவர்களும், வீட்டை விட்டுத் தொழிலுக்காக அல்லது வேறு தேவைகளின் நிமித்தம் வெளியில் சென்றவர்களும் முதல்நாள் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாட வெளியிடங்களுக்குச் சென்றவர்களும் மட்டுமே உயிர் தப்பிப் பிழைத்தனர். ஆனால் வெளியிடங்களில் இருந்து பல்வேறு தேவைகளுக்குமாக கரையோரங்களிலுள்ள உறவினர்களின் வீடுகளில் வந்து தங்கியவர்கள், காலையில் மீன் வியாபாரத்திற்காக அல்லது உடற்பயிற்சி செய்வதற்காக கடற்கரைக்குச் சென்றவர்கள் அனைவரும் இச்சுனாமியில் கொல்லப்பட்டனர்.

உயிர்ச் சேதங்கள் ஒருபுறமிருக்க சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் சொல்லில் அடங்காது. நாடளாவிய ரீதியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி 78,387 வீடுகள் முற்றிலுமாக அழிந்துள்ளன. 60,197 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன. இவ்வீடுகளுடன் சேர்ந்து மக்களின் பரம்பரைச் சொத்துக்கள் பலவும் அழிந்து போயின. வாழ்நாள் முழுவதும் தேடிய தேட்டங்கள் அனைத்தையும் சிலமணி நேரத்தில் இழந்த இம்மக்கள் இத்துயரில் இருந்து இன்னும் மீள முடியாத நிலையில் உள்ளனர். கரையோர மாவட்டங்கள் பலவற்றிலும் உட்கட்டமைப்புக்களில் பெரும்பாலானவற்றைச் சுனாமி அழித்தொழித்தது. அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை, காலி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்கள் அதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளாயின. 161 பாடசாலைகள் முற்றாகவும் 59 பாடசாலைகள் பகுதியளவிலும் நாடு முழுவதிலும் சேதமடைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை விட வணக்கஸ்தலங்கள், வைத்தியசாலைகள், மக்கள் மண்டபங்கள், பொதுச் சந்தைகள் போன்ற பல சொத்துக்களும் முற்றாகவும் பகுதிகளாகவும் அழிந்து போயின. மின்சாரம், தொலைபேசி, குடிநீர் போன்றவற்றின் இணைப்புக்கள் முற்றாக சீர்குலைந்தன. வீதிகள், பாலங்கள் பலவும் போக்குவரத்திற்குதவாதவாறு சேதமடைந்தன.

மக்களின் வாழ்வாதாரங்கள் பலவும் சுனாமியினால் அழித்தொழிக்கப்பட்டன. பாதிப்புக்குள்ளான மாவட்ட மக்களின் வேளாண்மை உட்பட அனைத்துப் பயிர்களையும் கோழி வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு என அனைத்தையும் சுனாமி அழித்துச் சென்றது. சிறு முதலீடுகள் மட்டுமின்றி பாரிய முதலீடுகளை மேற்கொண்டிருந்த வர்த்தகர்கள் அனைவரும் நிர்க்கதிக்குள்ளாயினர்.

நிவாரணப் பணிகள் ஒரு மணித்தியாலத்திற்கும் குறைவான நேரத்தில் பாரிய அழிவை ஏற்படுத்திச் சென்ற இச்சுனாமியினால் ஆண்டாண்டு காலம் தங்கள் இருப்பிடங்களில் வசித்த 154,963 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். இதைவிட 235,145 குடும்பங்கள் முற்றாகப் பாதிப்புக்குள்ளாயின. வரலாற்றில் முன்னொரு போதும் கண்டிராத இப்பேரழிவைக் கண்ட இலங்கை அரசு, அவ்வேளையில் நிலைகுலைந்து போனதென்னவோ உண்மைதான். இதனால், அரச உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைய சில வாரங்களாயின. அதுவரையும் தனியார் பலரும் பொது அமைப்புக்கள் மூலம் பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை அளித்து மனித நேயத்தைக் காப்பாற்றினர். இன, மத வேறுபாடின்றி வெளியிடங்களிலிருந்து பலரும் பாதிக்கப்பட்ட இடங்களைத் தேடிச் சென்று பல்வேறு உதவிகளையும் செய்தனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு தனது நிவாரணப் பணிகளைத் தொடங்கிய வேளையில் உலக நாடுகள் பலவும் இலங்கையை நோக்கி நேசக் கரம் நீட்டின. ஐக்கிய நாடுகள் சபையின் உதவியும் இலங்கைக்குத் தாராளமாகக் கிடைத்தது. இவ்வேளையில் உலகளாவிய ரீதியிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவும் இங்கு வந்து நிவாரணப் பணியில் ஈடுபட்டன. அரசுடன் சேர்ந்து உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் துரிதகதியில் இயங்கி மக்களைப் பட்டினியில் இருந்து காப்பாற்றின. அத்துடன், தற்காலிகக் கொட்டில்களை அமைத்து அவற்றில் முடியுமானவரை அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து அல்லல்பட்ட மக்களை ஓரளவு ஆறுதலடையச் செய்தன. சுனாமியினால் தாக்கப்பட்டு நான்கு வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். தென்பகுதியில் நிவாரணப் பணிகள் மிகவும் வேகமாக மேற்கொள்ளப்பட்டு பெரும்பாலான மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு விட்டனரென்பதை ஊடகங்கள் மூலமாக அறிய முடிகின்றது. ஆனாலும் வடகிழக்குத் தமிழ், முஸ்லிம் மக்களில் பெரும்பாலானோர் இன்னமும் தற்காலிக முகாம்களிலேயே இருந்து வருகின்றனர். இதுமட்டுமன்றி, பாடசாலைகளும் பிற உட்கட்டமைப்பு வசதிகளும் கூட இன்னும் முற்றாக ஏற்படுத்தப்படவில்லை.

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் கரையோரத்திலிருந்து 200 மீற்றர் எல்லைக்குள் வசித்தவர்கள் மிகவும் பாவம் செய்தவர்களாகவே கருதப்பட வேண்டும். மிகக் கூடிய உயிரழிவுகளையும் பெருமளவு பொருட் சேதங்களையும் சந்தித்த இவர்களுக்குக் கிடைத்த நிவாரணங்களும் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகும். நான்கு வருடங்கள் கடந்த நிலையிலும் தற்காலிகக் கொட்டில்களில் வசிக்கும் இவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்துக் கவலை கொண்டவர்களாகவே உள்ளனர். இந்நிலையில், வட கிழக்கிலிருந்து அரச சார்பற்ற உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் பல தங்கள் பணிகளை முடித்துக் கொண்டு அல்லது இடைநிறுத்திக் கொண்டு வெளியேறி விட்டன. எஞ்சியுள்ள சில நிறுவனங்கள் தங்கள் பணிகளை மட்டுப்படுத்திய அளவில் மேற்கொள்ளுகின்றன. வடக்கில் காணப்படும் அமைதியற்ற சூழ்நிலையினால் புனரமைப்புப் பணிகள் தடைப்பட்ட போதும் கிழக்கில் அவ்வாறானதொரு நிலை உள்ளதெனக் கூற முடியாது.

2004 டிசம்பர் 26 ஆம் திகதி கடலால் ஏற்பட்ட சுனாமியில் இருந்து மீண்ட வடகிழக்கு மக்களால் அரசியல் சுனாமியில் இருந்து இன்னமும் முற்றாக விடுபட முடியவில்லை. கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட வீடுகளைக் கூட பெறுவதில் அவர்கள் இன்னமும் பல இடர்களை எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக, வெளிநாட்டு உதவிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகளைப் பெறுவதிலும் அவற்றில் வசிப்பதிலும் முஸ்லிம் மக்கள் பெரும் சவால்களை எதிர்நோக்குகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.