இந்தியப் பிரதமரின் கருத்தையே நாம் நடைமுறைப் படுத்தி வருகின்றோம்: இலங்கை அரசு

பயங்கரவாதத்தை ஒழிக்கவேண்டும் என்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்தினையே இலங்கையில் தற்போது நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என அமைச்சரும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
வடக்கில் படையினர் நாளுக்கு நாள் பெறும் வெற்றிகளை சீர்குலைக்கவும் அதனை மழுங்கடிக்கவும் தெற்கில் அரசியல் மட்டத்தில் சதி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் அவர் கூறினார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவற்றைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது:-

பயங்கரவாதம் என்பது இந்தியா, இலங்கைக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. அது அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதே. அதனால் பயங்கரவாதத்தின் உட்கட்டமைப்பை தெற்காசிய ரீதியில் உடைத்தெறிந்து பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என இந்தியப் பிரதமர் அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். அவரது கருத்தையே நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

வடக்கில் படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதாபிமானப் போர் நடவடிக்கைகள் வெற்றிகரமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போர் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்கள் செறிந்து வாழ்வதால் அவர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாதவண்ணம் படையினர் தமது தாக்குதல்களை மேற்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இல்லாவிடின் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி அப்பகுதிகளை எப்போதோ படையினர் தம்வசப்படுத்தியிருப்பர்.

கிளிநொச்சி நகரத்தை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று கூறிய விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று கிளிநொச்சி தம்மை விட்டுப் போனாலும் தமது போர் நடவடிக்கைகள் தொடரும் என்று புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் கூறியுள்ளார். இதன்மூலம் படையினரின் பலமும் புலிகளின் பலவீனமும் வெளிப்படையாகின்றது.

மேலும் பாராளுமன்றத்தை அவசரமாகக் கூட்டுமாறும் பெற்றோலின் விலை குறித்த பல்வேறு கருத்துகளை வெளியிட்டவாறும் படையினரால் வடக்கில் முன்னெடுக்கப்படும் வெற்றிகள் தெற்கில் மூடி மறைக்கப்படுவதுடன் குறைத்தும் மதிப்பிடப்படுகின்றன. இது எமக்கு கவலையை அளிக்கின்றது. அத்துடன் போர் முனைகளில் கொல்லப்படும் படையினரின் எண்ணிக்கைகளை அதிகமாக வெளியிடுவதுடன் உண்மைத் தகவல்களை மூடி மறைத்து அதன்மூலம் ஒரு சாரார் சந்தோசமடைகின்றனர்.

இராணுவத்தரப்பில் ஏற்படும் இழப்புக்களையோ அல்லது அவர்கள் குறித்த தகவல்களையோ மறைக்கவேண்டிய அவசியம் எமக்கில்லை. வடபகுதியில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்களை படையினரே எடுக்கவேண்டும் அரசியல் வாதிகள் எடுக்கக் கூடாது. அத்துடன் அரசியல்வாதிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வது படையினரின் கடமையும் அல்ல. அதனால் அப்பாவித் தமிழ்மக்களைப் பாதுகாப்பதற்காக வடக்கில் மேற்கொள்ளப்படும் மனிதாபிமானப் போர் நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும்.

இதேவேளை வடக்கில் இடம்பெயர்ந்துள்ள அப்பாவித் தமிழ்மக்களின் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதில்லை என்றும் அவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவாறான கருத்துக்களை வேளியிட்டு வருகின்றன.

ஆனால் அவ்வாறு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குத் தேவையான உதவிகள் சர்வதேச ரீதியில் கிடைப்பதுடன் அவை உரிய முறையில் விநியோகிக்கப்பட்டும் வருகின்றன. குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுவதைப் போன்று எமது சகோதர சகோதரிகளை துன்புறுத்திப் பார்க்கும் எண்ணம் எமக்கில்லை. இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் கெஹலிய.

Leave a Reply

Your email address will not be published.