தமிழீழ அங்கீகார மாநாடு: அனுமதி மறுப்பை எதிர்த்து வழக்கு

தமிழீழ அங்கீகார மாநாட்டை நடத்துவதற்கான பொலிஸாரின் அனுமதி மறுப்பை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் தமிழீழ அங்கீகார மாநாடு மற்றும் இளஞ்சிறுத்தைகள் பாசறை ஆரம்ப விழா போன்ற நிகழ்வுகள் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை கட்சித் தொண்டர்கள் மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் மோதல் ஏற்பட்டது. திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரசார் வற்புறுத்தி வருகிறார்கள்.

இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் நடத்தும் தமிழீழ அங்கீகார மாநாட்டுக்கு பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர்.

மாநாடு நடைபெறும் பகுதி நெரிசல் மிகுந்த பகுதி. பண்டிகை காலம் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் அந்த பகுதியில் மாநாடு நடத்துவதால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படும். எனவே மாநாடு நடத்த தடை விதிக்கப்படுகிறது என்று தடைக்கான காரணத்தை விளக்கி பொலிஸார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையிலேயே அனுமதி மறுப்பை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நேற்று மேன்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அவரது சார்பில் சட்டத்தரணி என்.எஸ். ராஜா மேன்நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார்.

அதில் மாநாட்டுக்கு பொலிஸ் அனுமதி மறுத்ததை ரத்து செய்ய வேண்டும். மாநாட்டுக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும்

நிருபர்களிடம் கருத்துத் தெரிவித்த திருமாவளவன் கூறுகையில், இந்த தடை உத்தரவை சட்டப்படி சந்திப்போம். உடனடியாக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து திட்டமிட்ட நாளில் மாநாட்டை நடத்துவோம். தடை விதித்ததற்கான காரணம் சட்டப் பூர்வமானதல்ல. நாங்கள் ஏற்பாடு செய்துள்ள மாநாடு தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்துக்கு ஆதரவாகவோ, இந்திய இறையாண்மைக்கு எதிராகவோ இல்லை. குறிப்பிட்ட நாளில் திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.