நீதிமன்றத்தினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் மிகவும் நிதானமானவை:- பல்வேறு சந்தர்ப்பங்களில் குறுகியதும் விரிவானதுமான வகையில் சட்டத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. நீதியரசர் சரத் என் சில்வா

நீதிமன்றத்தினால் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் எழுந்தமானவையல்ல. அவை மிகவும் நிதானமானதாகவே தீர்மானிக்கப்படுகின்றன என்று பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
 
இலங்கை சட்டக்கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெபற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்,

சட்டத்துடன் தொடர்புடைய சகல பிரிவுகளும் ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே சட்டவாட்சி நீடிக்கக்கூடியதாக இருக்கும். நீதித்துறையைச் சார்ந்த நாம் அனைவரும் சட்டத்தின் பல்வேறு நிறுவனங்களுடன் செயற்பட்டு வருகிறோம். எந்த ஒரு நிறுவனம் சிறப்பாக இருக்கின்றதோ அதன் வெளிப்பாடுகளும் சிறப்பானதாகவே இருக்கும். இதனையொத்ததே சட்டவாட்சியாகும்.

இன்றைய காலகட்டத்தில் நீதித்துறைக்கு எமது நாட்டில் பாரிய ஏற்றுக்கொள்ளல் இருக்கின்றது. பொதுவான தேவைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளமையே இதற்குக் காரணம்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் குறுகியதும் விரிவானதுமான வகையில் சட்டத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவ்வாறு எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் நிதானமானவை. அதனூடான தீர்ப்புகள் எதுவும் எழுந்தமானவையாக மேற்கொள்ளப்படுவதில்லை. சிந்தித்து நிதானமான தீர்ப்புகளே வழங்கப்படுகின்றன. நீதித்துறை எடுக்கின்ற தீர்மானங்களை அல்லது உத்தரவுகளை நாட்டின் அதிக தரப்பினர் ஏற்றுக்கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

நீதித்துறையின் நடவடிக்கைகளை நாட்டுமக்கள் நோக்கிக்கொண்டே இருக்கின்றனர். நீதித்துறையின் தீர்மானங்கள் தனிப்பட்டவரின் முயற்சியில் அமைந்து விடவில்லை. சட்டத்துறையில் அங்கம் வகிக்கின்ற சட்டத்தரணிகள், நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரினதும் ஒன்றிணைந்த வெளிப்பாடாகும். என்றார் பிரதம நீதியரசர்.

Leave a Reply

Your email address will not be published.