முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் மழை இடம்பெயர்ந்த மக்கள் தவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் கடும் மழைபெய்து வருவதாகவும் இதனால் இடம்பெயர்ந்து கொட்டில்கள் பொது இடங்களில் தங்கியுள்ள மக்கள் பெரும் கஸ்டங்களுக்கும் சிரமங்களுக்கும் ஆளாகியிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை இரவு காற்றுடன் பெய்த மழை தொடர்ந்து கடுமையாகப் பெய்து வதுவதனால் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், முல்லைத்தீவு நகரப்பகுதி வீதியின் இருமருங்கிலும் உள்ள குடாக்கடலில் நீர் பெருகி வீதி இருக்கும் இடம் தெரியாமல் மூடிக்கிடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வீதியில் பல இடங்களில் வீதியோர ஆழமான வாய்க்காலில் பெருகி வரும் நீர் வீதியை மூடியிருப்பதனால், வீதி இருக்கும் இடத்தை அடையாளப்படுத்துவதற்காக மக்கள் கயிறுகளைக் கட்டியிருப்பதாகவும், நீர் நிறைந்துள்ள வீதியில் பழுதடைந்த பகுதிகளில் வாகனங்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து மோசமடைந்த வீதியில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் மக்கள இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களை நாடி சென்றுகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒட்டுசுட்டான் வீதி மோசமாகப் பழுதடைந்திருப்பதனால், சில இடங்களில் வாகனங்கள் பள்ளங்களில் புதைந்துள்ள நிலையிலும் வீட்டுப்பொருட்களுடன் மக்கள் மிகுந்த கஸ்டத்திற்கு மத்தியில் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

வீதிகள் நீரில் மூழ்கியிருப்பதனால், இடம்பெயர்ந்து வந்து வீதிகளின் நிலைமை தெரியாத நிலையில் புதிய இடங்களில் தங்கியுள்ள மக்கள் சொந்த பாதகாப்பை முன்னிட்டு, போக்குவரத்துக்கள் செய்ய வேண்டாம் என முல்லைத்தீவு செயலக அதிகாரிகள் எச்சரிக்கை அறிவித்தல் விடுத்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.