கிளாலியில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 40 படையினர் பலி; 100-க்கும் அதிகமானோர் காயம்; 8 உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் மீட்பு (பட இணைப்பு)

யாழ். கிளாலி களமுனையில் சிறிலங்கா படை கொமாண்டோக்கள் மேற்கொண்ட பெரும் எடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 40 படையினா் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் எட்டு உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:கிளாலிப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2:00 மணிக்கு சிறிலங்கா தரைப்படையின் 53 ஆவது டிவிசன் கொமாண்டோக்களின் எயார் மொபைல் பிரிகேட் கொமாண்டோ படையினர் பெரும் முன்நகர்வினை மேற்கொண்டனர்.

பெருமெடுப்பில் செறிவான பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலெறிப் பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் களப்பீரங்கிகளின் நேரடிச் சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர்.விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதி நோக்கிய சிறிலங்கா படையினரின் தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் காலை 9:30 நிமிடம் வரை முறியடிப்புத் தாக்குதலை தீவிரமாக நடத்தி படையினரின் நடவடிக்கையினை முறியடித்தனர்.

இதில் 40 படையினர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர்.

படையினரின் எட்டு உடலங்கள் உட்பட பெருமளவிலான படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்டுள்ள ஆயுத விபரம்:

ஆர்பிஜிக்கள் – 02

ரி-56 ரக துப்பாக்கிகள் – 14

ஏகேஎல்எம்ஜி – 01

40 மில்லிமீற்றர் குண்டு செலுத்திகள் உட்பட பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.