கிளிநொச்சியை வளைக்க நான்கு முனைகளில் முயற்சி – நேற்று அதிகாலை முதல் உக்கிர சண்டை வெடிச்சத்தங்களால் அதிர்கிறது வன்னி

கிளிநொச்சி நகரைக் கைப்பற்றுவதற்காக நேற்று அதிகாலை முதல் படையினர் நான்கு முனைகளில் பாரிய முன்னகர்வு முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர். முகமாலை, கிளாலி, பரந்தன், கிளிநொச்சி ஆகிய நான்கு முனைகளில் ஓரேநேரத்தில் – கனரக ஆயுதங்களின் பிற்களச் சூட்டாதரவுடன் படையினர் மேற்கொண்டிருக்கும் முன்னேற்ற முயற்சியை தமது படையணிகள் வெற்றிகரமாக முறியடித்து வருகின்றன – என்று விடுதலைப் புலிகள் அறிவித்தனர். வெடிச்சத்தங்களால் நேற்று வன்னிப் பகுதி எங்கும் அதிர்ந்த வண்ணம் இருந்ததாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.”யாழ்ப்பாணம், கிளாலி முன்னரங்க நிலைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் கடுஞ்சமர் இடம்பெற்றது. இச்சமரில் 55 இராணுவத்தினர் உயிரிழந்தனர். மேலும் 120இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இராணுவத்தினரின் சடலங்களும் வெடிபொருட்களும் புலிகளால் மீட்கப்பட்டன” – என்று புலிகள் நேற்றுப் பிற்பகல் அறிவித்தனர்.
இச் சமர் சுமார் ஏழரை மணிநேரம் நீடித்திருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.“நேற்று அதிகாலை 2 மணியளவில் 53 ஆவது படைப்பிரிவின் எயார் மொபைல் பிரிகேட் கொமாண்டோ படையினர் செறிவான பல்குழல் மற்றும் ஆட்லறிப் பீரங்கித் தாக்குதல்களுடனும், களப்பீரங்கிகளின் நேரடிச் சூட்டாதரவுடனும் கிளாலிப் பகுதியில் முன்நகர்வினை மேற்கொண்டனர். அதற்கு விடுதலைப் புலிகள் காலை 9.30 மணிவரை முறியடிப்புச் சமரை மேற்கொண்டனர்.

அதிலேயே படைத் தரப்பில் 55பேர்வரை உயிரிழந்தனர். 120இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்தனர். உயிரிழந்த இராணுவத்தினர் பலரின் சடலங்களையும், வெடிபொருட்களையும் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.” – என்று விடுதலைப் புலிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஏனைய முனைகளில் நடந்த சண்டைகளின்பாது ஏற்பட்ட சேதவிவரங்களை நேற்று மாலை வரை புலிகள் தரப்பிலிருந்து கிடைக்கவில்லை.

அதேவேளை, இராணுவத்தின் 57 ஆவது படைப்பிரிவினர் நேற்றுக்காலை முதல் கிளிநொச்சிப்பகுதிக்குச் சமீபமாக இருந்து நகரப்பகுதியை நோக்கிப் படை நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றனர் என்று இராணுவத் தரப்பு தெரிவித்தது.
முற்பகல் 10.30 மணிமுதல் இரணைமடுவுக்குத் தெற்கே இருந்து  வடக்கு நோக்கி ஏ- 9 வீதி வழியாக அவர்கள் முன்னேறிக்கொணடிருக்கின்றனர் என்று இராணுவ அதிகாரிகள் கூறினர்.

இதுபோலவே முகமாலையிலிருந்து பளைப் பிரதேசம் நோக்கி ஒரு படையணியும் கிளாலியிலிருந்து பரந்தன் நோக்கி ஒரு படையணியும் தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன என்றும் இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்தப் படை நடவடிக்கைகளின்போது  ஏற்பட்ட இழப்பு விவரங்கள் தொடர்பாக இராணுவத் தரப்பில் நேற்று மாலைவரை  எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
யாழ். தென்மராட்சிப் பகுதிகள் நேற்று அதிகாலை ஒரு மணி முதல் பீரங்கித் தாக்குதல்களால் அதிர்ந்த வண்ணம் இருந்தன  என்றும், அப்பகுதி வீதிகளில் இராணுவத்தினரின் ஏராளமான வாகனங்கள் அங்கும் இங்குமாக ஓடித்திரிந்தன என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்  தெரிவித்தன.

இது ஒரு புறமிருக்க, இராணுவத்தின் 59 ஆவது டிவிஷன் துருப்புகள்  முல்லைத்தீவிற்குத்  தெற்கே பாரிய முன்னேற்ற நடவடிக்கை  ஒன்றை ஆரம்பித்திருக்கின்றன என்றும் இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.