புஷ் மீது காலணி வீச்சு : பாக்தாத்தில் அவமானம்!(காணொளி இணைப்பு)

ஈராக் தலைநகர் பாக்தாத் வந்த அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் மீது எகிப்தைச் சேர்ந்த டிவி நிருபர் ஒருவர் தனது இரு காலணிகளையும் வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜோர்ஜ் புஷ் கடைசி முறையாக ஈராக்குக்கு விஜயம் செய்தார். தலைநகர் பாக்தாத் வந்த அவர் பிரதமர் நூரி அல் மாலிக்கைச் சந்தித்துப் பேசினார்.

பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன் கடைசி முறையாக ஈராக் வர வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைவதாக அவர் மாலிக்கியிடம் தெரிவித்தார்.

பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலில் மாலிக்கி பேசினார். பின்னர் புஷ் பேசத் தொடங்கினார்.

அப்போது திடீரென அரபி மொழியில் சத்தமாகக் கத்தியபடி ஒரு நிருபர் எழுந்தார். ”ஈராக் மக்கள் உனக்கு அளிக்கும் கடைசி குட்பை முத்தம் இதுதான், நாயே…” என்று கோபமாகக் கூறியபடி தனது காலணிகளையும் அடுத்தடுத்து புஷ்ஷை நோக்கி வீசினார்.

முதல் காலணி பாய்ந்து வந்தபோது புஷ் தலையைக் குனிந்து தப்பினார். அந்தக் காலணி பின்னால் உள்ள சுவரின் மீது பட்டு விழுந்தது. 2ஆவது காலணி வீசப்பட்டபோது அதைப் பிடிக்க ஈராக் பிரதமர் மாலிக்கி முயன்றார். ஆனால் முடியவில்லை. இருப்பினும் அ ந்தக் காலணியும் புஷ்ஷை உரசியபடி சென்று விழுந்தது.

இந்தச் சம்பவத்தால் புஷ் அதிர்ச்சி அடைந்தார். அவரது முகம் பேயறைந்தது போல மாறியிருந்ததைக் காண முடிந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் சுதாகரித்துக் கொண்டு அந்த நிருபரை மடக்கிக் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த டிவி நிறுவன செய்தியாளர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒருவர் மீது காலணியைத் தூக்கி வீசினால் அது மிகப் பெரிய அவமானமாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பி்ன்னர் நிலைமை சகஜமானது. அதன் பிறகு புஷ் பேசுகையில், அரசியல் கூட்டத்தின்போது நடப்பதைப் போல இப்போது நடந்து விட்டது. மக்களின் கவனத்தைக் கவர செய்யப்படும் செயல் இது. அந்த நபரின் (செய்தியாளர்) கவலை என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பதும் எனக்குப் புரியவில்லை என்றார் புஷ்.

பதவி விலகிச் செல்லும்போது பாக்தாத்தில் புஷ்ஷுக்குக் கிடைத்த இந்த வரவேற்பு அமெரிக்காவிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.