தமிழீழ வைப்பகத்தின் செயற்பாடுகளில் “தேசத்தின் குரல்” பாலசிங்கத்தின் பங்கு முதன்மையானது: வெ.இளங்குமரன்

posted in: தமிழீழம் | 0

தமிழீழ வைப்பகத்தின் தொடக்கத்தில் அதன் செயற்பாடுகளில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பங்கு முதன்மையானதாக இருந்தது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

வைப்பகவியல் கல்லூரியின் இரண்டாவது அணி மாணவர்களின் கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்புரையை தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் ஆற்றினார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மக்களின் நலன் பேணுவதற்கான கட்டுமாணங்களை ஒரு தேசத்திற்கான கட்டுமாணங்களை உருவாக்கியுள்ளார்.

இவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் தமிழீழ வைப்பகம் மற்றும் வங்கியியல் கல்லூரி. இவற்றின் மூலம் நமது தேசத்துக்கு தேவையான திறமையானவர்கள் வளங்கள் அதிகரிக்கப்படுகின்றன. அந்த வகையில் இக்கல்லூரியின் செயற்பாடுகள் தேவையை நிறைவு செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளன.

தமிழீழ வைப்பகத்தின் தொடக்கத்தில் அதன் செயற்பாடுகளில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பங்கு முதன்மையானதாக இருந்தது. அவரின் இரண்டாவது ஆண்டு நினைவில் இந்த நிகழ்வு நடைபெறுவது பொருத்தமானது.

சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது இன்று பெரும் அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் கொடுத்துக்கொண்டிருக்கின்றது. எல்லா வகையிலும் தமிழினத்தை சிதைக்க முனைகின்றது.

குறிப்பாக கல்வியை சிதைப்பதில் அது அதிகம் அக்கறையாக நிற்கின்றது. நடைபெறும் க.பொ.த. சாதாரண தரத் தேர்வினைக் கூட ஒழுங்காக நடத்த அது விடவில்லை.

தேர்வுத்தாள்களை அனுமதிப்பது தொடக்கம் தேர்வு வேளையில் தாக்குதல் நடத்துவது வரை அதன் கொடுமைகள் அதிகமான வண்ணமே உள்ளன.

இந்நிலையில் நாம் எமது விடுதலையைப் பெற்றுக்கொள்ள உறுதியுடன் செயற்படவேண்டும் என்றார் அவர்.

நிகழ்வில் வாழ்த்துரைகளை நிதித்துறை கணக்காய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் அறவாணன்-கிராமிய அபிவிருத்தி வங்கி பொறுப்பாளர் சுயன்-புலிகளின்குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் ஆகியோர் நிகழ்த்தினர்.

வங்கியியல் கல்லூரி பற்றிய உரையை தமிழீழ வைப்பக மேலாண்மைப் பணிப்பாளர் ம.வீரத்தேவன் நிகழ்த்தினார்.

சான்றிதழ்களை தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் வழங்கினார்.

வளவாளர்களுக்கான பரிசில்களை நிதித்துறை வாணிபங்களின் ஒன்றியத்தலைவர் சொ.வெற்றியரசன் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.