பிரணாப் முகர்ஜி கொழும்புக்கு போவது சந்தேகம்

posted in: தமிழ்நாடு | 0

இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி அடுத்த வாரம் சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு செல்லவுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ள போதும் அது தொடர்பாக உறுதியான தீர்மானம் இதுவரை இல்லை என கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்கள் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளன.


அத்துடன், முகர்ஜி கொழும்பு செல்வதற்கான நாளும் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையில் போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்த இந்திய மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து வலியுறுத்தியிருந்தனர்.

இதனையடுத்து, இலங்கையில் போர் நிறுத்தம் ஒன்றினை வலியுறுத்துவதற்காக வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெகுவிரைவில் கொழும்புக்கு அனுப்புவதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததாக தமிழக முதலமைச்சர் கூறியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாகவே, வியாழக்கிழமை பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசி மத்திய அமைச்சர் பாலு, இன்னும் ஐந்து அல்லது ஆறு நாட்களில் தான் நிச்சயமாக கொழும்புக்கு செல்லவிருப்பதாக முகர்ஜி உறுதியளித்தார் என தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே, இந்திய வெளிவிவகார அமைச்சரினது சிறிலங்கா பயணம் குறித்து தங்களுக்கு எந்தவிதமான உறுதிப்படுத்தல்களும் இதுவரை வரவில்லை என கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் பேச்சாளரான டின்கார் அஸ்தனொ தெரிவித்தார்.

அது மட்டுமல்லாது, வெளிவிவகார அலுவல்கள் அமைச்சின் வட்டாரங்களும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் சிறிலங்கா பயணம் குறித்து தங்களுக்கு எந்த அதிகாரபூர்வ அறிவித்தல்களும் கிடைக்கவில்லை எனக் கூறினர்.

எனவே, இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் சிறிலங்கா பயணம் தற்போதைக்கு சாத்தியமற்ற ஒன்றாகவே சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஏனெனில், அண்மையில் மும்பாயில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து, இந்தியா தற்போது பாகிஸ்தானுடனான விவகாரங்கள் பற்றி அதிக கவனம் செலுத்திக் கொண்டிருப்பதுடன், இந்திய நாடாளுமன்றத்தின் மாரி கால கூட்டத் தொடரும் தொடங்கியுள்ளது.

எனவே, இந்திய மத்திய அரசாங்கத்தின் முழுக்கவனமும் மும்பாய் குண்டுத் தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்த நடவடிக்கைகளின் மீது சென்றிருப்பதால் பிரணாப் முகர்ஜியின் சிறிலங்கா பயணம் தற்போதைக்கு சாத்தியப்படாது எனக் கூறப்படுகின்றது.

அத்துடன், இந்திய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நடைபெறவிருப்பதால் முகர்ஜியின் வருகை சாத்தியமற்ற ஒன்றாகவே இந்திய விவகாரங்களைச் சார்ந்தவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேநேரம், பிரணாப் முகர்ஜியை சிறிலங்காவுக்கு அனுப்புவதில் இந்திய மத்திய அரசாங்கத்தின் ஆர்வமானது சந்தேகத்துக்குரியதே என்றும் இந்தியத் தரப்பு தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பிரணாப் முகர்ஜியின் சிறிலங்கா பயணத்துக்கான நாட்கள் குறித்து எந்தவித தீர்மானங்களும் இதுவரை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படும் நிலையில், தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரசிலேயே தங்கியிருப்பதனால் காங்கிரசின் வழியிலேலயே அவர்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம்: தினக்குரல்

Leave a Reply

Your email address will not be published.