வருக! வருக! – ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலி

ஐரோப்பாவிலிருந்து 24 மணி நேரமும் ஒலிக்கும் முதல் தமிழ் வானொலியாக ஆரம்பிக்கப்பட்டது ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலி என்பது எல்லோரும் அறிந்ததே…

தன்னலமற்று உழைக்க பலரின் கூட்டுமுயற்சியில் ‘ரி.ஆர்.ரி’ தமிழ்ஒலி பல வருடங்களாக புலம்பெயர்ந்த தமிழர் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்தது. ஆனால் அதன்மூலம் எவ்வித பயனையும் அதற்கென உழைத்தவர்கள் கிஞ்சித்தும் பெறவில்லை. இந்தக் கலைஞர்களின் தன்னலமற்ற உழைப்பும், நேயர்களின் அதிக பங்களிப்பும் தமிழ் ஒலியின் வளர்ச்சியை வானளாவ உயர்த்தியது.

இந்நிலையில், 2000ம் ஆண்டின் இறுதியில் ‘ரி.ஆர்,ரி’ தமிழ் ஒலியின் இயக்குனர் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்ஒலிக் கலைஞர்கள் அனைவரும் நன்றியுணர்வுடன் அவரோடு சென்றனர்.

‘ரி.ஆர்.ரி’ தமிழ்ஒலிக் கலைஞர்களின் இந்த வெளியேற்றம் நேயர்கள் மத்தியில் மிகப் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. அதன் காரணமாக அவர்களின் நிறைவான நிதியுதவியுடன் புதியதொரு வானொலி ஆரம்பிக்கப்பட்டுத் திறம்பட இயங்கி வந்தது.

இந்த வேளை சேவையுணர்வுடன் பணியாற்றிய பல கலைஞர்கள், குடும்ப சூழ்நிலை – பணிச்சுமை காரணமாக வெளியேறிய நிலைமையில், அங்கு பணியாற்றிய கலைஞர்களுக்கும் தெரியாமலேயே, அந்த வானொலி தனது ஆரம்பகால இலக்கு – நோக்கத்திலிருந்து விலகி எதிர்நிலையெடுத்தது.

இச்சூழ்நிலையிலேயே நேயர்களின் விருப்பத்திற்கேற்ப வானொலியொன்று பிறப்பெடுப்பது காலத்தின் கட்டாயமானது.

ஆரம்ப காலத்திலிருந்து சேவையுணர்வுடன் பணியாற்றிய கலைஞர்களின் உழைப்பாலும், நேயர்களின் ஆதரவாலும் புகழ்பெற்ற ” ‘ரி.ஆர்.ரி’ தமிழ்ஒலி” என்ற பெயரையே அது மீண்டும் தனக்குச் சூடிக்கொண்டதுடன் அத்தனை கலைஞர்களையும் மீண்டும் உள்வாங்கிப் புதுப்பொலிவுடன் வானொலியில் வலம் வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.